பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு – நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று தெரிவிப்பு!

Monday, September 5th, 2022

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் (Liz Truss) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து போரிஸ் ஜோன்சன் அண்மையில்  விலகியிருந்தார்.

புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ்ட் டிரஸ்ஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் அஞ்சல் மற்றும் இணையவழியில் வாக்களித்திருந்தனர்.

இதற்கான வாக்குப்பதிவுகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்திருந்தது. பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக்கைவிட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வானார்.

பிரதமராக தெரிவான பிறகு கருத்துவெளியிட்ட லிஸ் டிரஸ், கடும் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

போரிஸ் ஜோன்சன், ரிஷி சுனக் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போடியில் வெற்றி பெற்றதையடுத்து ராணி எலிசபெத்தை லிஸ் டிரஸ் சந்திக்க உள்ளார்.

இங்கிலாந்து ராணி, லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு ஆனதை முறைப்படி அறிவிக்க உள்ளார். நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானிய பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த ரிஷி சுனக் இறுதி சுற்றுக்களின் போது திடீரென பின்னடவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: