பிரிட்டன் இளவரசரின் இழப்பில் இலங்கையும் பங்கெடுக்கின்றது – இரங்கல் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, April 10th, 2021

மாட்சிமைதங்கிய இராணி இரண்டாம் எலிசபெத் மாட்சிமைதங்கிய இராணி அவர்களே, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக, உங்கள் அன்புக் கணவர் எடின்பர்க் கோமகன் மேன்மைதங்கிய இளவரசர் பிலிப் அவர்களின் மறைவையிட்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கொட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேன்மைதங்கிய இளவரசர் இலங்கை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததுடன், இரண்டாம் உலகப் போரின்போது இலங்கையில் அவர் குறுகிய காலம் தங்கியிருந்ததை அடிக்கடி மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அவர் இங்கு தங்கியிருந்த நினைவுகளும், அதன் பின்னர் மாட்சிமைதங்கிய உங்களுடன் இலங்கைக்கு அவர் மேற்கொண்ட இரண்டு அரசமுறை விஜயங்களும் இலங்கை மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

மேன்மைதங்கிய இளவரசரின் மறைவையிட்டு நாங்கள் மிகுந்த துயரங்கொண்டிருக்கும் அதேநேரம், பிரித்தானியா தேசத்திற்கு அவர் செய்த பெரும் சேவை, அவரது புகழ்பெற்ற கடற்படை பணிகள் மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அவரது சேவைகளையும் நினைவு கூர்கிறோம்.

மாட்சிமைதங்கிய மகாராணி அவர்களே, தயவுசெய்து, என்னுடையவும் இலங்கை மக்களினதும் இரங்கலை அரச குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவியுங்கள். இந்த துக்ககரமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் மாட்சிமைதங்கிய உங்களுடனும் அரச குடும்பத்துடனும் ஐக்கிய இராச்சிய மக்களுடனும் உள்ளன. தயவுசெய்து எங்கள் உண்மையான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து பிரித்தானியாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக இறுதி நிகழ்வு குறித்த முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் உயர் அட்மிரல் பிரபு பதவியில் இருந்த பிலிப்பின் நினைவாக கடலில் றோயல் கடற்படைக் கப்பல்களில் அவருக்கு துப்பாக்கி வேட்டுக்களால் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், பிலிப்பின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைவிட, அவுஸ்ரேலியாவில், கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில், இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் 41 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: