பிக்பென் கடிகாரம் 4 ஆண்டுகளுக்கு இயங்காது!

Wednesday, August 16th, 2017

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் காணப்படும் உலகப் புகழ் பெற்ற பிக்பென் கடிகாரத்துக்கான பராமரிப்புப் பணி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அக்கடிகாரம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை இயங்க மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் தனியாக நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவினர் இந்தக் கடிகாரத்துக்கான பராமரிப்புப் பணியை அடுத்த வாரம் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இந்தக் கடிகாரத்தின் செயல்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 1859ஆம் ஆண்டில் மணிக்கூண்டு திறக்கப்பட்டதுடன், பிக்பென் எனும் இந்தக் கடிகாரம் கடந்த 157 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இந்நிலையில், பராமரிப்புப் பணிக்காக இந்தக் கடிகாரம் அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கமாகும்.

இந்தக் கடிகாரத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவும் இந்தக் கடிகாரம் அமைந்துள்ள எலிசபெத் கோபுரத்தில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளவும் பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது எலிசபெத் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளையும், பராமரிப்புப் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல உதவும் வகையில் லிப்ட், சமையலறை, மலசலகூடங்கள் ஆகியனவும் அமைக்கப்படவுள்ளன என பராமரிப்பு நிபுணர் குழுவின் தலைமை கட்டட நிபுணரான ஆடம் வாட்ரோப்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிக்பென் பராமரிப்புப் பணி உள்ளிட்டவற்றுக்காக ஏறத்தாழ 5 கோடி பவுண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு இந்தக் கடிகாரம் நிறுத்தப்பட்டாலும், ஆங்கில புத்தாண்டு தினத்தை அறிவிக்கும் வகையில் கடிகாரத்தில் மணி அடிக்கச் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: