பாவனையாளர் நீர் கட்டணம் ரூ. 7,500 மில்லியன் நிலுவையில் ஜனாதிபதி முன்பாக சபையின் தலைவர் தகவல்!

Friday, June 17th, 2022

நாடளாவிய ரீதியிலுள்ள நீர் பாவனையாளர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு 7500 மில்லியன் ரூபா கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்டவைகளே மேற்படி கட்டணத்தை செலுத்துவதிலிருந்து தவறியுள்ளதாக ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றுள்ள விசேட பேச்சுவார்த்தையின் போது மேற்படி சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்வழங்கல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது நிர்மாணப் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ள சிறிய மற்றும் பாரிய குடிநீர்த் திட்டங்களை விரைவில் நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். அதற்கிணங்க உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதியின் கீழ் தற்போது 2337 பாரிய, சிறு மற்றும் நடுத்தர அளவிலான குடிநீர்த் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.

2022 ஏப்ரல் மாதம் வரை வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட பாவனையாளர்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய தொகை சுமார் 7,500 மில்லியன் ரூபாவாகுமென இதன்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: