பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதி உதவியுடன் பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலைமை பாதிப்படைந்துள்ளதையடுத்து விவசாய அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அது தொடர்பில் தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, மேற்படி செயற்திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள்  உணவு மற்றும் விவசாய அமைப்பு 27 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபை ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போஷாக்கு நிலைமையை அதிகரிப்பதற்காக போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் உள்ளடங்கிய போஷாக்குள்ள பகல் உணவை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தினமும் 82 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும் அதனை நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் பெற்றுக் கொடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: