பாடசாலை மாணர்களை பலியெடுத்த கிண்ணியா விபத்து : தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கை!

Wednesday, November 24th, 2021

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கூடி, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக, கிழக்கு மாகாண பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா உள்ளிட்டோர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட, சில அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் நேற்றுக் காலை விபத்துக்குள்ளானதில், 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் மரணித்தனர்.

இப்பகுதியில், பழைய பாலத்திற்குப் பதிலாக, களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, பீப்பாய்கள் மற்றும் பலகை என்பனவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த மிதப்பு பாலத்தின் இரு பகுதிகளும், கம்பிகளின் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், நேற்றுக் காலை 7.30 அளவில் விபத்து இடம்பெற்றபோது, குறித்த படகில் 30 பேரளவில் பயணித்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மிதப்பு பாலத்தின் ஒரு கம்பி அறுந்தமையால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகன டயர்களை தீயிட்டு எரித்து அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன்,  குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: