பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை: தீர்மானிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது கல்வியமைச்சு!

Saturday, May 16th, 2020

கொரோனா தாக்கத்தினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் எவ்வாறிருப்பினும், பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முறைமை குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அந்த பேச்சுவார்த்தையில் விஷேடமாக கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தங்களது பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய, எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணியவாறு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஏற்படும் இடவசதி தொடர்பான பிரச்சினை குறித்து இந்த பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டு பிரிவுகளாக பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அது குறித்து இதுவரை இறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் குறித்த விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக் கல்வி பணிமனை மற்றும் மாகாண கல்வி காரியாலய அதிகாரிகள் ஆகியோரை குறித்த விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: