பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டு!

Monday, May 4th, 2020

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க  தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

எனினும், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பிலான இறுதி முடிவு கல்வி அமைச்சினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் வாரங்களில் பாடசாலை சுற்றாடலில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: