பாடசாலைகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுங்கள் – வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை!

Thursday, December 27th, 2018

வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சீராகச் சென்றடைய வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் சேவை அவசியமானது. ஒவ்வொரு பாடசாலைக்கும் அனுமதிக்கப்பட்ட ஆளணி தொடர்பில் சுற்றறிக்கைகள் ஆரம்பத்திலேயே பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டு கொள்ளாத தன்மை காணப்படுகின்றது. ஆகவே அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆசிரியர் வளம் பகிரப்படல் வேண்டும். சில பாடசாலைகளில் ஆளணிக்கு அதிகமாகவும் சில பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஆளணியை விட ஆசிரியர்கள் குறைவாகவும் காணப்படுகின்றனர். அதனால் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பின் அதனை அதிபர்கள் எழுத்து மூலமாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். அதன் பிரதி மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வலயக்கல்வி பணிப்பாளர்கள் வெற்றிடம் உள்ள பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக தொகுதிப் பாடங்களை நடத்துவதற்கு நேரசூசியை அனுமதிக்கக் கூடாது.

பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக பாடங்களை ஆரம்பிக்கவோ நேரசூசிகளை வழங்கவோ முடியாது. ஆசிரியர் ஒருவருக்கு 20 க்கு குறைவான பாடவேளைகளை உள்ளடக்கி வாரம் ஒன்றுக்கு நேரசூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

Related posts: