பாடசாலைகளில் பாலியல் கல்வி – கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023

உலகின் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட இணைய பாவனை கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்வதால் சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல சமூக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.-

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போதைய சமூகம் இடைவிடாத போட்டியில் உள்ளது.

போட்டியின் தன்மை காரணமாக ஒரு தலைமுறை மன அழுத்தத்தில் இருப்பதைக் காண்கிறோம். எதிர்கால பயிற்சித் திட்டங்களில் மனநல மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் பிராந்திய மட்டத்தில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பல அதிகாரிகள் உள்ளனர்.

331 பிரதேச செயலகப் பிரிவுகளும் 25 மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் மாதாந்த அபிவிருத்திக் குழுவை நடத்துகின்றன. இதன் மூலம் இப்பிரச்சினைகளில் பெருமளவு தலையீடு செய்ய முடியும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி, துஷ்பிரயோகம், போதைப் பழக்கம் போன்ற பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாகவே இடம்பெறுகின்றன.

பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுகின்றனர். அதனை மிகவும் பொருத்தமான முறையில் பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும். கல்வி சீர்திருத்தத்தில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” எனதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: