பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு – ஜனவரி 4 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

Friday, December 22nd, 2023

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 04 ஆம் திகதிமுதல் கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சை இடம்பெறவுள்ளதன் காரணமாக, பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகளுக்காக, பாடசாலைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதி பத்திரத்தில் உள்ள விபரங்களை திருத்துவதற்கு வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இதனால், பரீட்சை அனுமதி பத்திரத்தில் பெயர், பாடநெறி, ஊடகம் மற்றும் பிறந்த திகதி என்பனவற்றில் ஏதேனும் தவறு இருப்பின் அதனை இணையவழி ஊடாக திருத்தம் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

000

Related posts: