பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் – பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, July 14th, 2022

பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டுமென்றும் அதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையும் முற்றுகையிட்டு அங்குள்ள முக்கியமான ஆவணங்களை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென்றும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டுமக்களுக்கு விசேட உரையொன்றையாற்றினார்.

அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்வதையடுத்து ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த திங்கட்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அதன்போது எதிர்வரும் வாரத்தில் புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் வாக்கெடுப்பு நடத்துவது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அதன்போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கும் சந்தர்ப்பத்தில், தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அதன்போது தாம் உறுதியளித்துள்ளதாகவும் அதற்கிணங்க கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் அதுதொடர்பில் பேசப்பட்டது. அதனையடுத்து போட்டியிட விருப்பமானவர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. இதுபோன்றவொரு பின்னணியே நாட்டில் காணப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 12 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அவர் சபாநாயகரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக என்னிடம் தெரிவித்திருந்தார். எனினும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்கள் தொடர்பில் நாம் ஆச்சரியமடைந்தோம்.

அவர் நாட்டிலிருந்து வெளியேறிய பின் நாம் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில குழுக்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.

ஜனாதிபதி மாலைத்தீவுக்கு செல்வதற்காக விமானமொன்றை வழங்கியமைக்காக விமானப் படைத் தளபதியின் வீட்டையும் முற்றுகையிடுவதற்கும் அத்துடன் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடுவதற்கும் அவர்கள் தீர்மானித்திருந்தனர். அதன்மூலம் நாட்டின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்பதே அவர்களின் எண்ணம்.

அத்தோடு நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலைத்திட்டமொன்றை அவர்கள் திட்டமிட்டிருந்தனர். எவ்வாறாயினும் சபாநாயகர் பாதுகாப்பு தொடர்பான முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட நடவடிக்கையெடுத்தனர். எனினும் அதனை முற்றுகையிடுவதற்கான எந்த காரணமும் அவர்களுக்குக் கிடையாது.

சட்டப்படி நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டேன். சபாநாயகருடன் இணைந்து புதிய ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்வதை நிறுத்துவது அவர்களின் நோக்கமாகவிருந்தது. அவர்களுக்கு விருப்பமான ஒருவரை வேட்பாளராக்குவதே அவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அரசியலமைப்பு பிரயோசனமற்றது என்றும் நாடாளுமன்றமும் அவசியமில்லயென்றும் சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் சொல்வதை செயற்படுத்துமாறு அவர்கள் கேட்கின்றனர். நாட்டின் அரசியலமைப்பு, மக்களின் ஆணை, நாட்டின் இறைமை ஆகியன செயற்படுவது நாடாளுமன்றத்தின் மூலமே. அந்தவகையில் அரசியலமைப்பை கிழித்தெறிய என்னால் முடியாது.

சிலர் நாட்டில் பாசிஷவாத அரசியல் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எமது சில அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதனால் தற்போது எழுந்துள்ள நிலமையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவுக்கு நான் உத்தரவு பிறப்பிக்கின்றேன்.

அந்தவகையில், நாம் இந்த பாசிஷவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க வேண்டும். சாதாரண மக்களின் வீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து நிலைமையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படையினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது. முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்றைப் பெற்றுத்தருமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

உங்களது பிள்ளைகளை கருத்திற்கொண்டு எமது எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் சட்டம் மற்றும் அமைதியை பாதுகாக்க வேண்டிய காலமிது. அந்தவகையில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: