பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? – 31 ஆண்டுகளாக கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்? – அனுசுயா கேள்வி!

Thursday, November 17th, 2022

நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், முதல் குற்றவாளி நளினியை நான்தான் அடையாளம் காட்டினேன்.

ராஜிவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான நளினி, உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

ராஜிவ் கொலை நடந்த இடத்தில், நான் நளினியை பார்த்தேன். அதன் அடிப்படையில் அடையாள அணிவகுப்பில் நளினியை நான்தான் முதல் குற்றவாளியாக அடையாளம் காட்டினேன்.

நான் அடையாளம் காட்டியதால் மட்டும் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. மொத்தம், 1,444 சாட்சியங்களை விசாரித்து ஆவணங்கள் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பொதுக்கூட்ட இடத்தில் தான் இல்லை என்றும் இந்திரா சிலை அருகில் இருந்ததாகவும் நளினி கூறியுள்ளார். இரவு 10:20 மணிக்கு வெளியூர் நபரான நளினிக்கு இந்திரா சிலை அருகில் என்ன வேலை? ராஜிவ் பொதுக்கூட்ட மைதானத்தில் நளினியும், சுபாவும் ஓட வசதியாக அமர்ந்திருக்கும் படம், பத்திரிகைகளில் வெளியானது. அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.

மனித வெடிகுண்டு நடந்த அன்று மாலை 6:00 மணிக்கு நளினியை பொதுக்கூட்ட மேடை அருகே பார்த்தேன். நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

தினமும் பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது. 31 ஆண்டுகளாக போராட ராஜிவை கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்.

நளினியை குற்றவாளி அல்ல எனக்கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை,  கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: