பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் – ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரின் தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக இரண்டு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதுடன் அது தொடர்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டு வருவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

இதேவேளை, காணி வழங்கும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக தம்முடன் சுற்றாடல் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்களென மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ராஜிகா விக்கிரமசிங்க எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜிகா விக்கிரமசிங்க தமது கேள்வியின் போது – நாட்டில் பெருமளவு காணிகள் வெறுமனே உள்ளதால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் இக்காலத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக காணிகளை பகிர்ந்தளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் வழங்குகையில் மேலும் தெரிவித்த அமைச்சர் – இரண்டு இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதற்கான செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியால் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வலயங்களை இனம் கண்டு அத்துடன் புதிய சுற்றுலா வலயங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: