பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிகைளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022

தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கிய முன்னேற்றகரமான நடவடிக்கை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது –

நாடாளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 வருடங்களின் பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுப்பதுடன், குறித்த சட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான உறுதியான பாதுகாப்பை வழங்கும் மிகவும் முற்போக்கான நடவடிக்கையாக அமையும்.

அத்துடன் முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட பல நபர்களால் உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் மூலமாக தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான திருத்தங்களை இறுதி செய்வதற்கு பின்பற்றப்பட்ட செயன்முறையானது, 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை துணைக் குழுவின் நியமனம் எனத் தலைப்பிடப்பட்டு, 2021 ஜூன் மாதம் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தை உள்ளடக்கியுள்ளது.

மேலும், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாமா இல்லையா என்பதை அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதற்காக, புதிய சட்டத்தை அறிமுகம் செய்து, பாதுகாப்பு, வெளிநாட்டு, நீதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அதிகாரிகள் குழுவை நியமித்து, அமைச்சரவை துணைக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவைக்குப் பரிந்துரையுடன் சமர்ப்பிக்க அதிகாரம் அளித்து, அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்து மேற்கூறிய கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க 2021.06.21 ஆம் திகதி அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, நீதி, பொதுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு, பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய அதிகாரிகள் குழுவொன்றை ஜனாதிபதியின் செயலாளர் ஜூன் 2021 இல் நியமித்திருந்தார்.

அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்வதற்காக 2021 அக்டோபரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, வெளிநாட்டு அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றதுடன், அதிகாரிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி, அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு 2021.11.15ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

அதிகாரிகள் குழுவின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த அமைச்சரவை உப குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் மேலதிக ஆலோசனைகளை நடாத்தியது. இலங்கை சட்ட ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகக் குழுக்களுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான உத்தேசத் திருத்தங்கள் குறித்து அமைச்சரவை உபகுழுவும் கலந்துரையாடியது. வாய்மொழியாகவும் எழுத்துபூர்வ சமர்ப்பணங்கள் மூலமாகவும் பரிசீலனைக்கான முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த செயன்முறையின் நிறைவில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை அமைச்சரவை உபகுழு இறுதி செய்ததுடன், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன்பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்திற்காக தாக்கல் செய்வதற்கும் 2022 ஜனவரி 24 ஆந் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தடுப்புக் காலத்தைக் குறைத்தல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வதற்கும் அகற்றுவதற்கும் தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்ல நீதவானுக்கு வெளிப்படையாக அதிகாரம் வழங்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதித்துறை மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்குதல், தடுப்புக்காவலில் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை சட்டத்தரணிகள் அணுகுவதற்கான சட்டம் மற்றும் அவ்வாறு தடுப்புக்காவலில் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான விதிகளை ரத்துச் செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக் குற்றங்களுக்கு நாளாந்த அடிப்படையில் விசாரணைகளை நடாத்துதல், தடுப்புக்காவலில் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், வழக்குகளை விரைந்து தீர்ப்பதை உறுதிசெய்தல், புதிய பிரிவு 15B ஐ அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்துதல் ஆகியன அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலம் 2022 ஜனவரி 27 ஆந் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை தாக்கல் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அவைத் தலைவருக்கு அமைச்சரவை உபகுழுவின் தலைவரான வெளிநாட்டு அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

1979ஆம் ஆண்டு ஜூலை 24ஆந் திகதி பாராளுமன்றத்தில் சான்றளிக்கப்பட்டதிலிருந்து 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாடுகள் செயற்பட்டு வருவதுடன், 1982 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சிறிய திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பல ஆலோசனைகளுக்குப் பின்னர், மேற்கூறிய சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் நீதித்துறை மீளாய்வுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் ஒரு முற்போக்கான படியாக முன்மொழியப்பட்ட திருத்தம் அமைவதுடன், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்கொள்வதற்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் அமைகின்றஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: