பத்திரிகை பேரவை சட்டத்தை சகல ஊடகங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் ஊடகக் பேரவை சட்டமாக மறுசீரமைப்பது தொடர்பில் அவதானம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!

Saturday, July 24th, 2021

இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை சகல ஊடகங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் ஊடகக் பேரவை சட்டமாக மறுசீரமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையின் சார்பில் தமது அமைச்சு பொறுப்புக்களை நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொலைக்காட்சி சேவைகளுக்காக அனுமத்திப்பத்திரம் வழங்கல் மற்றும் தற்பொழுது இயங்கிவரும் செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யும் செயன்முறைகளை ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கான வரி அறவீடு 2021 பெப்ரவரி மாதம்முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கமைய இந்த வரி விதிப்பின் காரணமாக இதுவரை 251 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறவிடப்படும் வரித் தொகையை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், இதன் ஊடாக உள்நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தொலைக்காட்சிக் கலை மற்றும் இத்தொழில்துறையை பாதுகாத்து, இந்நாட்டுக் கலைஞர்களைப் பலப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவை நட்டம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து, புதிய நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இதனை வருமானம் ஈட்டும் மட்டத்துக்குக் கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் கூறியுள்ளா. கொரோனா தொற்றுநோய் காரணமாகப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊடக நிறுவனங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் சவால் தனது அமைச்சுக்குக் காணப்படுவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: