பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020

முன்னர் அறிவிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் அழைப்பு விடுத்தாலும் தொடர்ந்தும் நீடிக்கும் எண்ணமில்லை என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் அந்தப் பதவியைப் பூர்த்தி செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹுல் , பேராசிரியர் நளின் அபேசேகர ஆகியோர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் தற்போதைய தவிசாளரிடத்தில் அடுத்தகட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் ஆகிய ஐவர் கொண்ட நாடாளுமன்ற பேரவை பரிந்துரைக்கவுள்ளது.

நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் உரித்தைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: