பணி செய்ய அஞ்சும் அரச பணியாளர்கள் – யாழ். மாவட்டச் செயலர்!

அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது பணிகளைச் செய்ய அஞ்சுகின்றனர் போன்று தெரிகின்றது. அவ்வாறு பயந்தால் பணிக்கு வரக்கூடாது. வந்தால் மக்களுக்கு பணியாற்றியே தீர வேண்டும் என யாழ். மாவட்டச் செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டின் சிவில் நிலமை தொடர்பான கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டத்தைப் பேணிக் காக்க செயற்பட்டே ஆக வேண்டும். மாறாக சொந்த நலன் தொடர்பில் பயம் கொள்ளக் கூடாது. இந்தப் பயம் பல திணைக்களங்களிலும் உள்ளது.சில உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் சபைக்கு வருமானம் எடுத்தால் போதும் எனச் செயற்படக்கூடாது. சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டு மக்களுக்கான உச்சபட்ச சேவையையும் வழங்குவதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். புகைத்தல், மதுபானம் போன்ற பொருள்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் முடியும் என்றால் ஏன் ஏனைய இடங்களில் முடியவில்லை. அதை அதிகாரிகள் உடன் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிரதேசங்கள், அனுமதியற்ற இடங்களில் சிறுவர்களுக்கு மது விற்பனை தற்போதும் தொடர்கின்றது என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. சிறுவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சில பெரியவர்களோ தமக்கு கால் போத்தலுக்கு பணம் கொடுத்தால் சிறுவர்களுக்கு மதுபானத்தை வாங்கிக் கொடுக்கின்றனர். தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவர்கள் காலை போய் மாலை வீடு திரும்புகின்றனர் என்று முறையிடப்படுகின்றது. அங்கே போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது, நீர் வசதி கிடையாது எனவும் முறையிடப்படுகின்றது. இந்த வசதிகள் இல்லாத தனியார் கல்வி நிலையங்களை ஏன் உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கவிடுகின்றன?. இவை தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் – என்றார்.
Related posts:
|
|