இனியொருதடவை இதற்கு இடமளியோம் – மாணவர் தலைவர்கள்  உறுதி!

Wednesday, July 20th, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று முக்கிய அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், அநுரபிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ், சிங்கள மாணவர்களின் பிரதிநிதிகளுடனும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் காலங்களில் எந்தவிதமான குழப்பகரமான செயற்பாடுகளிலும் ஈடுபடப்  போவதில்லையென யாழ் பல்கலைக்கழக மாணவ குழுக்களின் தலைவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் தாம் தலையிட விரும்பவில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழகம் குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கு மேலதிகமாக வெளியிலிருந்து எந்தவித குழுக்களையும் நியமிக்கத் தேவையில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்பதை மாணவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழகம் மீண்டும் விரைவில் முழுமையாக திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சகல மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கிறது என பிரதி ஊடகத்துறை அமைச்சர் கருணாரட்ன பரனவிதான சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மாணவர்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வு தொடர்பில் தாம் நேரில் கண்டறிந்து கொண்டதாகவும், மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களில் அவற்றை அவர்கள் புரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்ட துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தள்ளார்.

சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து வழமைபோன்று தமது கல்வி செயற்பாடுகளைத் தொடரமுடியும்.இதற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையென சிங்கள மாணவர்கள் சார்பில் கருத்து வெளியிட்ட மாணவத் தலைவர் கூறினார். கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாது. எனவே எவரும் அச்சமின்றி வந்து படிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.

இதேவேளை, இந்த அமைச்சர்கள் குழு யாழ்ப்பாண கச்சேரியில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரையும் சந்தித்து பல்கலைக்கழக சம்பவம் குறித்துக் கலந்துரை யாடலொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: