படகு விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியா துக்கதினம் அனுஸ்டிப்பு!

Thursday, November 25th, 2021

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாக துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று கிண்ணியா சிவில் சமூகம் இணைந்து கடைகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றை மூடி வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது பிரதான வீதிகள் கடைகள் அரச திணைக்களங்கள் வங்கிகள் ,பள்ளிவாயல்கள், வீடுகள் என பல இடங்களிலும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டன. உயிரிழந்த நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக –

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை தேடி பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த 3 பேரையும் நேற்று கைது செய்து நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே கிண்ணியாவில் இன்றையதினம் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: