பச்சிலைப்பள்ளி மேற்கில் வெடிபொருள்கள் அகற்றப்பட 225 ஏக்கர் விரைவில் விடுவிப்பு!

Saturday, January 19th, 2019

பச்சிலைப்பள்ளி மேற்குப் பகுதியில் வெடிபொருள்கள் அகற்றப்பட்ட அம்பளாவளை, இந்திராபுரம் மற்றும் இத்தாவில் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியில் வெடிப்பொருள்கள் அகற்றும் பிரிவினரால் அகற்றப்பட்ட 225 ஏக்கர் நிலப் பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.

இப் பகுதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதால் அங்கு மீள்குடியமரவுள்ள குடும்பங்கள் பிரதேச செயலகத்தில் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமாலை கிராமத்தின் வடக்குப் புறத்தில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் தூரத்திலிருந்து மேலும் 172 மீற்றர் தூரம் அம்பளாவளை பகுதியின் ஒரு பகுதியும் இத்தாவில் கிராமத்தில் இத்தாவில் வீதியின் மேற்குப் புறத்தில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் தூரத்திலிருந்து மேலும் 883 மீற்றர் தூரமும் இந்திராபுரம் கிராமத்தில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் தூரத்திலிருந்து மேலும் 300 மீற்றர் தூரமும் விடுவிக்கப்படவுள்ளன.

அதற்கான வேலி அடைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அவை முடிவடைந்ததும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர.

இக் கிராமங்களைச் சேர்ந்த 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதேசங்களிலும் தங்கியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தொடருந்து வீதி மற்றும் ஏ9 முதன்மை வீதி சீரமைக்கும் பணிகளுக்காக இரண்டு கிலோ மீற்றர் நீளமும் 500 மீற்றர் அகலமும் கொண்ட பகுதிகளில் வெடிப்பொருள்கள் அகற்றப்பட்டன.

பின்னர் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இத்தாவில் தொடக்கம் முகமாலை வரையான பகுதிகளில் இந்திராபுரம் கிராமத்தில் வெடிபொருள்கள் அகற்றப்பட்ட 200 மீற்றர் தூரத்தில் 150 மீற்றர் தூரம் விடுவிக்கப்பட்டு கடந்த 2015 மற்றும் 2016 டிசம்பர் மாதம் குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டன.

Related posts: