நெடுந்தீவு படுகொலை – சந்தேக நபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவிப்பு!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முன்பதாக சந்தேக நபரை 2 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையில் மீட்கப்பட்டது.
நெடுந்தீவு – மாவலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நேற்றுமுன்தினம் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதன்போது, 100 வயது வயோதிபப் பெண்ணொருவரம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த காவல்துறை குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|