தரம் ஐந்து பரீட்சை: வினாத்தாளில் குறைப்பாடுகள்!

Saturday, August 17th, 2019

கடந்த நான்காம் திகதி நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் சில குறைப்பாடுகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் போது இந்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜிதவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த விடயம் குறித்து விரைந்து செயற்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

முதலாம் பகுதியின் ஆறாம் வினாவில் கேட்கப்பட்டுள்ள விடயம் தரம் 3, 4 மற்றும் 5 பாட விதானத்திற்கு உட்பட்டது கிடையாது எனவும், இந்த விடயம் தரம் 8 கணித பாடத்தில் முக்கோண உருவாக்கம் என்ற பாடத்தில் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதியின் 43ஆம் வினாவில் கேட்கப்பட்டுள்ள விடயம் தரம் 3, 4 மற்றும் 5 பாட விதானத்திற்கு உட்பட்டது கிடையாது எனவும், இந்த விடயம் தரம் 8 விஞ்ஞான பாடத்தில் தாவரங்களின் பகுதிகள் என்னும் பாடப்பிரிவில் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் பகுதியின் 7ஆம் வினாவில் சிங்களமொழி மூல வினாத்தாளில் குறைபாடு காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பரீட்சை வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: