நுண்கடன் நிறுவனங்களால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து!

Tuesday, July 30th, 2019

நுண்கடன் நிறுவனங்களால் யாழ்ப்பாணத்து கலாச்சாரங்கள் சீர்கெட்டு விவாகரத்துவரை சென்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் தொல்லையினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள நிலையில், பிள்ளைகள் அனாதரவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதோடு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.தவரூபனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் நுண்நிதி கடன் நிறுவனங்களினால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், பிரதேச செயலக அண்மைய தகவலின் படி இந்த கடன் நிறுவனங்களினால் 14 குடும்பங்கள் விவாகரத்துவரை சென்றுள்ளதாகவும், அவ்வாறு சென்றுள்ள அனைத்து குடும்பமும் 32 வயதுக்கு உட்பட்ட இளம் குடும்பங்களாகவே காணப்படுகின்றதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன்களை பெற்ற பெற்றோர்கள் கடன் வசூலிப்பாளர்களுக்கு பயந்து வீடுகளை விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களின் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளதோடு, சமூகத்தில் பாரிய சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடன் நிறுவனங்களினால் இவ்வாறான பாதிப்புக்களுக்கு அப்பால் கடன் பெற்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றதோடு, ஒரு சில சம்பவங்கள் மட்டும் வெளியில் வந்தாலும் பல சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாது நடைபெறுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த பெண்கள் உடல், உள ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றதோடு, யாழ்ப்பாண கலாச்சாரமும் அதளபாதாளத்தை நோக்கி செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன் பெறுவதை கட்டுப்படுத்த பாதிப்புக்களை எதிர் கொள்ளாமல் இருக்க சட்ட ஏற்பாடுகளை அல்லது கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: