எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை – அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Saturday, November 27th, 2021

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் வாயு கலவை குறித்து ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் வருடாந்தம் 35 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுவாக அவற்றில் 5 அல்லது 6 விபத்துக்களே பதிவாகின்றன.

2015 ஆம் ஆண்டுமுதல் லாப் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களில், 12 விபத்துக்கள் வீடுகளிலும், 9 விபத்துக்கள் வியாபார நிலையங்களிலும் மற்றும் 2 விபத்துக்கள் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களிலும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கான வர்த்தமானி வெளியிடுவது மற்றும் சட்டங்களை இயற்றுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு சிலிண்டர்களினூடாக ஏற்படுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கையை முற்றாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கருத்தின்படி, கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு இடம்பெறவில்லையெனவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (27) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்த விடயம்குறித்து ஆராய்வதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: