நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

Monday, January 16th, 2017

நாட்டில் தற்போது நிலவும் வறட்சிக் காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலையை எதிர்கொள்வதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திட்டம் வகுத்துள்ளது.. தற்போது 5 மாவட்டங்களில் கடும் வறட்சிக் காலநிலை எதிர்நோக்கப்பட்டிருப்பதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்டி பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுலேயே கடும் வறட்சிக் காலநிலை நிலவுகின்றது. இந்த மாவட்டங்களில் நீரை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வாகனங்களைக் கழுவுதல் வீட்டுத் தோட்டம் விலங்குகளை குளிப்பாட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகளைப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்படக்கூடிய வரட்சி நிலைமையைஎதிர்கொள்வதற்காக ஆயிரம் குழாய்க் கிணறுகளைப் புனரமைப்பதற்கும் ஆழமான நீரூற்றுக்களில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கும் புதிதாக 4 ஆயிரம் குழாய்க் கிணறுகளை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதியளவு குடிநீர் கிடைக்காத பிரதேசங்களை அடையாளங்கண்டு பௌசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படும்.

கொழும்பில் தற்போது நீரை விநியோகிப்பதில் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படவில்லை. இருப்பினும் குழாய் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தினால் நீர் கிடைக்காத பகுதிகளுக்கு அவற்றை விநியோகிக்க முடியமென்றும் அவர் கூறினார்.

களுத்துறை பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கடல்நீர் கலந்த நீர் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்திற்கு நீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

water_bord-626x380

Related posts: