நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Tuesday, January 12th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ. பத்மன் சூரசேன மற்றும் சிசிர டீ ஆப்றூ ஆகியோரோல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியதால், நீதியரசர்கள் குழாமின் தலைவரான சிசிர டி ஆப்றூ, குற்றவாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

வேண்டுமென்றே இவர் கருத்துகளை வெளியிட்டுள்ளமை, நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறும் போது தெரிவித்த கருத்துகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதியரசர் தமது தீர்ப்பை அறிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தரான சுனில் பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்ட மா அதிபரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் விருப்பங்களை ஏற்றே யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!
10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட...