நீதிமன்றின் உத்தரவையடுத்து வடமராட்சி கிழக்கில் அகற்றப்படுகின்றன சட்டவிரோத வாடிகள்!

Thursday, September 27th, 2018

வடமராட்சி கிழக்கில் அரச காணியில் அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடித்துவந்த 8 நிறுவனத்தினரும் நீதிமன்றின் உத்தரவையடுத்து வாடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைப் பரப்புக்குள் சிலர் வாடி அமைத்திருந்தனர். பிரதேச செயலாளரின் அனுமதியின்றி அரச நிலத்தில் அத்துமீறிக் குடியேறி வாடி அமைத்துத் தொழில் புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அது விசாரணைக்கு வந்த போது 8 நிறுவனங்களில் ஓர் நிறுவனம் மட்டும் உடன் வெளியேறுவதாகத் தெரிவித்து வெளியேறியது. அதனால் 7 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்போதே அவற்றை வெளியேறுமாறு நீதிமன்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

7 நிறுவனங்களும் உரித்தான அனைத்து வாடிகளையும் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்று கட்டளையிட்டது.

இதன்படி மருதங்கேணி, தாளையடிப் பகுதிகளிலுள்ள 8 நிறுவனங்களுக்குச் சொந்தமான 32 வாடிகளை அகற்றும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இதனால் அங்கிருந்த சுமார் 850 க்கும் மேற்பட்ட பிற மாவட்ட மீனவர்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறவுள்ளனர்.

எஞ்சிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 மீனவர்கள் யாழ்ப்பாண மாவட்ட எல்லைப் பரப்பினுள் தங்கியிருந்து தொழில் புரிந்து வருகின்றனர். குறித்த மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரியே அந்தப் பகுதி மீனவர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: