நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு நடத்திய   ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறை

Friday, April 29th, 2016

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், மல்லாகம் நீதிமன்றத்தில் வைத்து நேற்று (28) வழங்கினார்.மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நஸ்ரஈடாக ஐந்து பேரும் இணைந்து வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் மல்லாகம் மாவட்ட நீதவானாக இருந்து தற்போது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள சதீஸ்தரன், தீர்ப்பை வழங்குவதற்காக மல்லாகம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக நீதிமன்றத்தில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வெளியில் வந்த இளைஞரை, அங்கு காத்திருந்த 15 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வாளால் வெட்டியதுடன் அவரது மோட்;டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீ.ஸ்ரீசங்கர் என்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் பொலிஸார், 8 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்போது, தாங்கள் ஐவரும் சுற்றவாளிகள் எனத் தெரிவித்து வந்தனர். ஆனால், சம்பவத்தை கண்ணால் கண்ட சுமார் 25 சாட்சியங்கள் எதிரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தன.

இதனையடுத்து, இவர்கள் ஐவரும் குற்றவாளிகள் நீதிமன்றம் அறிவித்ததுடன குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட, அழகன் ரனீஸ்வரன், கந்தையா கைலாயம், செல்வேஸ்வரன் பிரதாப், தனராஜ் நிரோசன், காங்கேஜன் பிரதீபன் ஆகிய ஐவருக்கும் கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக கூட்டம் கூடிய குற்றத்துக்கு 6 மாத கால கடூழியச் சிறைத்தண்டனையும், அடித்து காயம் ஏற்படுத்திய குற்றத்துக்கு 18 மாத கால கடூழியச் சிறைத்தண்டனையும், மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்துக்கு 18 மாத கால கடூழியச் சிறைத்தண்டனையும், குற்றவாளிகளாக இருந்தும் சுற்றவாளிகள் என பொய்கூறி, வழக்கை இழுத்தடித்த குற்றத்துக்கு 6 மாத கால கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

நஷ்ரஈட்டுத் தொகையைக் கட்டத்தவறின் மேலும் 6 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை அனுப்பிக்க நேரிடும் என நீதவான் கூறினார்.

Related posts: