நிவர் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாரானது தமிழகம் – யாழ் மாவட்டத்தில் 55 குடும்பங்கள் பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் தகவல்!

Wednesday, November 25th, 2020

தமிழகத்தை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ள ‘நிவர்’ புயல் இன்று நள்ளிரவுமுதல் நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கனமழை இன்றும் தொடர்ந்து பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் தொடர்ச்சியாக கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன் காரனமாக கரையோரங்களை அண்டிய சில பகுதிகளில் அவ்வப்போது காற்று கடுமையாக வீசிவருகின்றது

இதனிடையே தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள நிவர் சூறாவளியானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலமிக்க சூறாவளியாக மாறி நாட்டின் வடக்கு கரைக்கு அருகில் தமிழ்நாடு கரையை ஊடறுத்து செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக புத்தளம்முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் தொடர்ந்தும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே குறித்த கடற்பகுதிகளில் கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை கடற்பகுதியில் பயணித்த மீன்பிடி படகொன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருகோணமலை – திருகடலூர் பகுதியை சேர்ந்த 40 வயதானவரே மரணித்துள்ளார்.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் நிவர் சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் அறிவுறுத்தியிருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் இவ்வாறு கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்றுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நிவர் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள படகொன்று இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி அடித்து செல்லப்பட்ட நிலையில் அந்த நாட்டு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

நேற்று இவ்வாறு குறித்த படகு அடித்து செல்லப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய மீனவர் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளிநாட்டு அமைச்சு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, நிவர் சூறாவளி காரணமாக பருத்தித்துறை, கரவெட்டி, காரைநகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 55 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் சி.என்.சூரியராஜா இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: