நிறைவுக்கு வந்தது சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை – தாதியர்கள் இன்று காலைமுதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு!

Wednesday, January 17th, 2024

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.

எவ்வாறாயினும் நேற்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்காத தாதியர்கள் இன்று காலை 7 மணிமுதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்..

இதேவேளை, நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பவற்றுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவுக்கும் இடையே நேற்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற மற்றுமொரு கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன இதன்போது தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய, பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகியோருடன் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடலின் போது சுகாதார தொழிற்சங்கங்கள் தங்களது கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளன.

எனினும் இதன்போது கருத்துரைத்த பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க, குறித்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு சிறிது காலம் செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் உடனடியாக சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த வேலை நிறுத்தத்தால், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: