நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, February 6th, 2023

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிர்மாணத்துறையில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிர்மாணத்துறையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கம்.

இதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இலங்கை தேசிய நிர்மாண சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் விதிகளின் கீழ், நிர்மாண நடைமுறை அபிவிருத்தி அதிகாரசபையானது நிர்மாணத் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் நிர்மாணத் துறையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், பதிவு செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல் ஆகும்.

நிர்மாணத்துறையில் பணியாற்றும் 13 இலட்சம் மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் நிர்மாணத்துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பல கட்டங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நிர்மாண மற்றும் அபிவிருத்திச் சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக அத்துறையில் இருப்பவர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இது தொடர்பான சுற்றறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ் கடந்த 27ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: