லோதா மீது BCCIஇன் எதிர்ப்புத் தொடர்கிறது!

Monday, October 17th, 2016

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களைப் பிரேரிப்பதற்காக உருவாக்கப்பட்ட லோதா செயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) தெரிவித்துள்ளது.

லோதா செயற்குழு முன்வைத்த அனேகமான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட இந்திய உச்சநீதிமன்றம், அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு உத்தரவிட்டது. ஆனால், அவற்றில் முக்கியமான சிலவற்றை ஏற்றுக் கொள்வதில், அச்சபை இன்னமும் தயக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இது தொடர்பில், அண்மையில் இடம்பெற்ற உச்சநீதிமன்ற அமர்வில், அச்சபைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ஒக்டோபர் 17இல் (நாளை) இடம்பெறவுள்ள அமர்வில், பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக, அவசரக் கூட்டமொன்று, டெல்லியில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வதில், நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக, அச்சபை முடிவெடுத்துள்ளது.

“குறிப்பிட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எங்களுக்குக் காணப்படும் தயக்கங்களையும் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களையும், எங்களுடைய சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் முன்வைப்பர்” என, சபையின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு, நீதிமன்றம் அனுமதிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட அவ்வதிகாரி, அதன் பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, நீதிமன்றம் முடிவெடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, லோதா செயற்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியேற்படும் என, கடிதமொன்றைத் தருமாறு இந்திய கிரிக்கெட் சபை கோரியது என்ற விடயம் தொடர்பாக, தனிப்பட்ட உறுதிமொழிப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்குமாறு, உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நிலையில், அதை அவர் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்படுகிறது.

article_1476622816-Tamil6e57Lodha-2_16102016_GPI (1)

Related posts: