நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

Thursday, October 7th, 2021

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அந்த ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில், இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.

மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் என ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பன்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வெளியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ள தற்போது திருக்குமார் நடேஷன் அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: