நியமனத்துக்காகக் காத்திருக்கும் 820 சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்த்த பின்னரே மேலதிக தெரிவுகள் இடம்பெற வேண்டும் – பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்து!

Saturday, May 5th, 2018

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலம் பணியாற்றியும் இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்காது காத்திருக்கும் 820 சுகாதாரத் தொண்டர்களையும் உள்ளீர்த்த பின்னரே மேலதிகமான தெரிவுகள் இடம்பெறவேண்டும் என்று வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

தமது நியமனங்கள் தொடர்பாக சந்தித்த அவர்கள் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள் –

கடந்த 1994 தொடக்கம் இன்றுவரைக்கும் வடக்கின் 5 மாவட்டங்களுக்குள்ளும் சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றி வந்துள்ளோம். கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் எமது நிரந்தர நியமனத்தைக் கோரி 118 நாள்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.

அந்த நிலையில் அரச தலைவர், தலைமை அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோரைப் பலமுறை சந்தித்து எமது விடயம் தொடர்பாக எழுத்து மூலமான ஆவணங்களை வழங்கியிருந்தோம்.

அந்தவகையில் அந்தந்த மாவட்ட செயலகங்களில் நடைபெற்ற அரச தலைவர் தலைமையிலான கூட்டங்களிலும் எங்களுடைய விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதன்படி வடக்கில் மொத்தமாகவுள்ள 820 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர்களது தகவல்களைச் சேகரிக்குமாறும், மேலதிகமாகத் தேவைப்படும் ஆளணி தொடர்பான தகவல்களையும் சேகரிக்குமாறும் சுகாதார அமைச்சினூடாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளிடம் நாம் சென்று கேட்டால் தேவையான ஆளணி கணக்கெடுப்புச் செய்து முடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இன்றுவரை அந்த ஆளணி கணக்கெடுப்புச் செய்யப்படாத நிலையில் அரசால் கடந்த மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சுகாதார உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றாதவர்கள் கூட செல்வாக்குகளைப் பயன்படுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.

கல்வித்தகைமை, வயது எல்லை கணக்கில் எடுக்காமல் சேவைக்காலத்தின் அடிப்படையில் எம்மை உள்ளீர்ப்பதாகவும் அதன் பிறகே மேலதிக வெற்றிடங்களுக்கு ஆளணிகளை உள்வாங்குவது என்றும் பலமுறை அரச அதிகாரிகளால் எமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. இதன் பின்னர் இந்த வர்த்தமானி அறிவித்தல் வந்துள்ளது இது அநீதியான செயற்பாடாகும்.

எனவே வடக்கில் உள்ள 820 சுகாதாரத் தொண்டர்களையும் உள்ளீர்த்தபின்னரே ஏனையோரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளதுடன், எமது நிலையை கருத்தில்கொண்டு எமக்கான ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நாம் வேண்டி நிற்கிறோம் என்றனர்.

Related posts: