நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வலுவாக உதவும் – சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ அறிவிப்பு!

Thursday, August 17th, 2023

நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும்  என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) வெளியுறவு ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளரும் சீனாவின் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போது வாங் யீ  இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

“சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக இருப்பதுடன், இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்பு நாடாகவே  இருந்து வருகிறது. இலங்கையின் முக்கிய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாகவே சீனா நிற்கிறது.

இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதில் சீனா உறுதியாகவுள்ளது.  இலங்கையுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது.

இலங்கையின் சுயாதீன அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்தவும், “வறுமைப் பொறி” மற்றும் “வளர்ச்சியற்ற பொறியை” அகற்றவும், அதன் தொழில்மயமாக்கல் செயல்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை துரிதப்படுத்தவும் சீனா உதவும்.

இலங்கை தனது தற்காலிக சிரமங்களை கடந்து, அதன் அபிவிருத்தி நிலைமைகளுக்கு ஏற்ப உரிய பாதையைக் கண்டறியும்“ என்றும் கூறியுள்ளார்.

சீனா-தெற்காசிய கண்காட்சியில் இலங்கை ஒரு முக்கியமான பங்கேற்பாளர் மற்றும் பயனாளி என்று குறிப்பிட்ட அவர், சீன சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்ள இலங்கை தரப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.

“இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும், கடினமான காலங்களில் இலங்கைக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்கியமைக்காக பிரதமர் இதன்போது  நன்றி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற இரு தரப்புக்கும் இடையிலான முன்னோக்கிய முதன்மையான ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கை மக்களுக்கு நன்மைகளை கொண்டு வருவதுடன் பிராந்திய இணைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், சுற்றுலா, எரிசக்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை சீனாவுடன் இணைந்து உணவு தன்னிறைவை அடைவதற்கும் முக்கிய கைத்தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் உதவும் என்று அவர் மேலும் கூறிளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: