நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022

துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாம் எதிர்கொண்டுள்ள கசப்பான சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுநோய் நம்மை இழுத்துச் சென்றிருக்கும் படுகுழி இந்த துறைமுகத்தை விட ஆழமானது என்று நான் நினைக்கிறேன். அதை மக்களிடம் இருந்து மறைக்க விரும்பவில்லை.’

மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களுக்கு நாமே பொறுப்பு. பொருட்களின் விலையேற்றத்தைவிட வரிசையில் நிற்பது என்பது சிறந்த விடயமல்ல என எமது மக்கள் நம்மிடம் கூறுகின்றனர். எங்களுக்கு அது தெரியும். இந்த அரசு தமது சொந்த வசதியைப் பற்றி சிந்திக்கவே இல்லை. தன் வசதி குறித்து மாத்திரம் அரசாங்கமாக இருப்பின் நிதி நெருக்கடி நிலவும் போது மக்களுக்கு பல நூறு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யாது.

இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி ஆரம்பத்தில் எமது சொந்த பணத்திலேயே நிர்மாணிக்கப்பட்டது. இந்த கிழக்கு முனையம் துறைமுக அதிகாரசபை தனது சொந்த நிதியில் கட்ட திட்டமிட்ட முனையமாகும். ஆனால் அந்த முனையத்தை நாங்கள் கட்டுவதற்கு முன்பே, நாங்கள் தோற்கடிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டோம். எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கம் எமது வேலைத்திட்டத்தை அன்றே நிறுத்தியது.

துறைமுகம் மட்டுமின்றி நாடு முழுவதும் எங்களது திட்டத்தை நிறுத்தியது. அந்த அரசாங்கம் இந்த முனையத்தை உருவாக்கவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யவோ விரும்பவில்லை.

அடக்குமுறைக்கு மத்தியிலேயே அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பத்திரிகையாளர்களின் காதுகள் துளைக்கப்பட்டன. ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தச் சென்ற மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தொழிற்சங்கங்கள் தலைதூக்க அனுமதிக்கப்படவில்லை. தேரர்களின் கருத்துக்களுக்கும் செவிமடுக்கவில்லை. அன்று இவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதை யாராலும் தடுக்க முடியவில்லை.

இங்கு மட்டுமல்ல மொனராகலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கொழும்பில் இருந்து கண்ணீர் புகை லொரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் நாம் கட்டியெழுப்பிய வளங்கள் வெளிநாடுகளுக்கு கையளிக்கப்பட்டன.

அத்தகைய நிலைமையின் கீழ் இருந்த ஒரு நாட்டையே நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இரு முனைகளில் எரியும் தீபத்தை அணைப்பது மிகவும் கடினம். ஒரு புறம் நல்லாட்சி அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்த ஒப்பந்தங்கள், மறுபுறம் அவற்றை விடுவித்து அபிவிருத்தி செய்வது. நாம் இந்த முக்கிய பகுதிகளை விடுவித்து அவற்றை அபிவிருத்தி செய்ய பணம் தேட வேண்டும் என கூறிய பிரதமர் நாட்டின் மீதான நம்பிக்கையை கைவிடாதீர்கள். கடந்து சென்ற இரண்டு வருடங்களை விமர்சகர்களுக்கு விட்டுவிடுவோம். எதிர்காலத்தை நாங்கள் பொறுப்பேற்போம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: