நாட்டையும் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, March 6th, 2022

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

பணியாற்றுவதற்கு சிறந்த சூழல் காணப்பட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மழை பெய்யும் போது நனையும் இடத்தில் பழைய கட்டடங்களில் அலுவலக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே ஒவ்வொரு பிரதேச சபைக்கும் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி மக்களை சிறந்த சூழலில் பணிபுரியச் செய்ய வேண்டும்.

ஒரு பக்கம் போர் தொடுத்தாலும் மறுபுறம் அரசு கட்டிடங்கள், வீதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அதற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என நம்புகிறேன்.

குறிப்பாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிய போது, நெடுஞ்சாலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும் நாம் நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். போர் இடம்பெறும் போதே நாம் இதனை செய்தோம். நாம் எந்தவொரு அபிவிருத்தியையும் இடைநிறுத்தாமலேயே 30 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம்.

மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொடுத்து வேலை செய்வதுடனேயே நாம் போரையும் முடிவுக்கு கொண்டு வந்தோம். அதனால் தான் இன்று சுதந்திரமாக வந்து சுதந்திரமாக பேசி சுதந்திரமாக நடமாடி முடிகிறது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கருத்துக்களை தெளிவாக கூறி தனது நாட்டை ஒரு திசையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேநேரம் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற புதிய முறைகளில் நாம் முன்னேறி வருகிறோம். நாம் எமது நாட்டையும் எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முறையாக மேம்படுத்தப்பட வேண்டும்.

சுமார் 98 சதவீத மின்சாரம் வழங்கப்படும்போது, அதே முறையில் நுகர்வோருக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் அரசாங்கம் தற்போது அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். நமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாமும் உழைக்க வேண்டும்.

இதனிடையே இன்று போதைப்பொருள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. நமது பிள்ளைகளை பாதுகாக்க போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின், நம் தேசத்தை அழிப்பதற்காக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்போரை நாம் அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.  எனவே போதைப்பொருளில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: