நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும் என அச்சம்!

Tuesday, December 13th, 2016

டிசெம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமாயின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ விடவும் அதிகரிக்கும் அபாயமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், டெங்கு நுளம்பு ஒழிப்பு அவசர நடவடிக்கையின் பொருட்டு, 40 மில்லியன் ரூபாயை, டெங்கு நுளம்பு ஒழிப்புத் தேசிய பிரிவுக்கு உடனடியாக விடுவிக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சின் செயலாளருக்குக் கட்டளையிட்டுள்ளார்.

டெங்குக் காய்ச்சல் காரணமாக இவ்வாண்டு 77க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 47 ஆயிரத்து 834 பேர் டெங்குக் காய்ச்சால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே 49.48 சதவீதமானவர்கள் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 3,169 பேர் கொழும்பு மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளிலும் 11,341 பேர் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் என 14,510 பேர், கொழும்பு மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கம்பஹா – 6,042, களுத்துறை – 3,119, இரத்தினபுரி – 2,832, காலி – 2,436, குருநாகல் – 2,313, யாழ்ப்பாணம் – 2,087, புத்தளம் – 979, மட்டக்களப்பு – 493 மற்றும் அம்பாறை – 231 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நுளம்புகள் பரவும் வகையில் காணப்படும் சுற்றுச்சூழல்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு, மக்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்தும் நீடிக்குமாயின் வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கை, நேற்றுத் திங்கட்கிழமை (12) முதல் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ள 10 மாவட்டங்களில் உள்ள, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் 30 இல் உள்ள சுகாதார அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

டெங்கு நுளம்புகள் பரவும் வகையில், சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ministry-of-health

Related posts: