நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தகவல்!

Thursday, July 29th, 2021

ஜப்பானிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை 7 இலட்சத்து 28 ஆயிரத்து  460 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கப் பெறுபவற்றில் 4 இலட்சத்து 90 ஆயிரம் தடுப்பூசிகளை முதற்கட்டமாக அஸ்ட்ர செனிகாவைப் பெற்றோருக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவிக்கையில் –

ஒரு கோடி 38 இலட்சம் தடுப்பூசிகள் இதுவரையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுள் 1.2 மில்லியன் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளும், ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகளும், 10.7 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும், 2 இலட்சத்து 5 ஆயிரத்து 920 பைசர் தடுப்பூசிகளும், 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று காலைவரை 8.2 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 1.8 மில்லியன் பேருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய 10.8 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரையில் 68.4 சதவீதமானோருக்கு முற்கட்டமாகவேனும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 16.1 சதவீதமானோருக்கு இரு கட்டங்களாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: