நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளது – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
Thursday, March 2nd, 2023
மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இலவசமாக சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போத அமைச்சர் ஜீவன் தொண்டமான் காணொளி மூலமாக நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் –
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள ஆயிரத்து 300 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சுமார் 23 ஆயிரம் சிறார்களை இலக்கு வைத்து எமது அமைச்சின் கீழ் சத்துணவு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கமைய ஒரு வயது முதல் 5 வயது வரையான சிறார்களுக்கு இலவசமாக காலையில் சத்துணவு வழங்கப்படும்.
மலையக சிறார்கள் மத்தியில் போஷாக்கிண்மை பிரச்சினை காணப்படுகின்றது. அதற்கானதொரு தீர்வாகவே இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
2022 டிசம்பர் மாதமளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு 64.4 வீதமாக காணப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்பான தலைமைத்துவத்தால் தற்போது அது 60.1 வீதமாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், 57.4 வீதமாக காணப்பட்ட பணவீக்கமும் 54.4. வீதமாக குறைவடைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உணவு பணவீக்கம் அதிகரிப்பு மலையக மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. எனவே, இத்திட்டம் அவர்களுக்கு சிறு ஆறுதலை வழங்கும் என நம்புகின்றோம்.
சத்துணவு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவியளித்த உலக வங்கி மற்றும் மகளிர் விவகார மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


