நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன – பிரபாகரனும் உயிருடன் இல்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்!

Friday, July 7th, 2023

தற்போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான குழுக்கள் தொடர்பில் பாதுகாப்புதுறை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்

அத்தோடு, புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன. பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆதாரங்களை வெளியிடப்படாமலுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதியாகும். அவருடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா அம்மான், தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இதற்கு சாட்சி.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் உரிய தகவல்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை. அதனை விட முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பல்வேறு காரணிகள் உள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்கமைய குறிப்பிட்டவொரு குழுவொன்று வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து, போராட்டத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஹோட்டலொன்றில் பயிற்சி பெற்றுள்ளமை தொடர்பான தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்புதுறை உன்னிப்பான அவதானத்துடனேயே உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு புலனாய்வு பிரிவின் பலவீனமே காரணம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது.

அண்மையில் அடிப்படைவாத அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதிகள் வடக்கிலுள்ள விகாரையொன்றுக்கருகில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்போம். உண்மையில் மக்கள் மத்தியில் எவ்வித மத பிரிவினைவாதமும் இல்லை.

அடிப்படைவாத செயற்பாடுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆவா குழுக்கள், பாதாள உலக குழுக்கள் என்பவற்றின் செயற்பாடுகள் கடந்த இரு மாதங்களாக அதிகரித்துக் காணப்பட்டது. எனினும் முப்படை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடுகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: