நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021

நாட்டின் வளர்ச்சியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கையுள்ளது என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகால கசப்பான சம்பவங்களால் இருண்டுகிடந்த இந்த நாட்டை நாம் பெற்றுக்கொண்ட காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் 30 வருடம் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. அதனை நாம் தேசிய வசதிகளுக்கு ஏற்ற நிலையில் மாற்றியமைப்பதற்கு பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வெற்றிகண்டிருந்தோம்.

அதேபோன்று மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

அதற்கேற்ப ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கிராமங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

ஜனாதிபதியின் கிராமத்துடன் உரையாடல், மீண்டும் கிராமத்துக்கு, கிராமத்தில் இருந்து அபிவிருத்தி போன்ற எண்ணக்கருவின் அடிப்படையில் கிராமிய வீதிகளின் நிலையை கருத்தில் கொண்டு 100,000 கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அவ் வீதிகளில் காணப்படும் பாலங்கள் தொடர்பான புனரமைப்பின் அவசியத்தை கருத்திற் கருத்தில் கொண்ட நாம் “5000 கிராமிய பாலங்கள்” செயல்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

கிராமங்களை இணைக்கும் இந்த செயல்திட்டமானது கிராமிய மக்களின் மனங்களை இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என்பதிலும் நாட்டின் வளர்ச்சியில் அதீத பங்கினை வகிக்கும் என்பதையும் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: