நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் குறித்தும் புதிய பொலிஸ்மா அதிபருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆராய்வு!

Monday, November 30th, 2020

புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் உத்தியோகப்பூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து தனது சேவை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் என்பன குறித்தும் கேட்டறிந்தார்.

இலங்கை பொலிஸ் துறையை முன்னோக்கி கொண்டு செல்லல், தேசிய ரீதியிலான பொறுப்புகளை தவறாது செயற்படுத்துதல் என்பன தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை பொலிஸ் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

1986ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அதிகாரியாக சேவையில் இணைந்த சி.டீ.விக்ரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவராவார்.

பிரேட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலை டிப்ளோமா பெற்றுள்ள சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் இதற்கு முன்னர் 13 தடவைகள் பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றியுள்ளார்.

சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் 13 வெளிநாட்டு கற்கைநெறிகளை நிறைவுசெய்துள்ளார். இந்தியா, பிரித்தானியா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், மியன்மார் ஆகிய நாடுகளில் மனித வள முகாமைத்துவம், உளவுத்துறை, பொது பொலிஸ்துறை, பயங்கரவாதத்தை தடுத்தல், போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிக காலம் பதில் பொலிஸ்மா அதிபராக சேவையாற்றிய சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் பொலிஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ள அதிகாரியாவார். அத்துடன், இலங்கை பொலிஸ் வரலாற்றில் புலனாய்வு அதிகாரியொருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவுசெய்யும் மனிதாபிமான நடவடிக்கையில் மிகுந்த பங்களிப்பும் இவருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: