நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 2nd, 2024

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதனிடையே, பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டு பெல் 212 ரக உலங்கு வானூர்திகளும், பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்றும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையுடன் கூடிய அதிக காற்று காரணமாக தனியார் பேருந்து ஒன்றின் மீது விளம்பர பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (02) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த விளம்பர பலகை பேருந்து மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும் இடையிலான ரயில் சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி  அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தற்போதைய மழை நிலைமை காரணமாக பாதுக்கை நகரின் ஊடாக பாயும் புஸ்செலிய ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுக்கை நகருக்கு செல்லும் இரண்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்கை  ஹங்வெல்ல வீதியும் பாதுக்கை இங்கிரிய வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பாதுக்கை நகரில் உள்ள பல தாழ்வான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தொடர் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன இடைத்தங்கல் பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: