நாடுமுழுவதும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, September 10th, 2020

புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு முழுவதும் உள்ள 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள வயல்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்  ஏக்கர்கள் நிலப்பரப்பில் ‘தேசிய உணவு உற்பத்தி பங்களிப்பு வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துட்ன் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உத்தேசிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

‘இதற்கு முன்னரும் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அது நிபுணர்களினதும் மக்களினதும் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியது. குளங்களை தோண்டி ஆழப்படுத்தினாலும் நீரை தேக்கி வைக்கக்கூடிய புராதன தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியான முறைகள் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும்.

அவ்வாறான குறைபாடுகளை களைந்து பொதுவான வழிமுறைகளின் மூலம் அந்தந்த பிரதேசங்களுக்கு மற்றும் குளங்களுக்கு உரிய முறைமைகளின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்’ என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இதன்போது குளங்களில் படிவுகள் நிரம்புவதினால் அவற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது. அதிகளவான குளங்களில் கரைகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்போகத்தை இலக்காக்கொண்டு அவற்றை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதன் அவசியத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

வயல் நிலங்களுக்கு மாத்திரமன்றி குடிநீரை பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏனைய நீர்த் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகவும் குளத்து நீரை பயன்படுத்துவதன் இயலுமை பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் ஆறுகளை அண்டிய பகுதியில் உள்ள வன ஒதுக்கீடுகளை ஆறு மாதங்களுக்குள் வர்த்தமானி மூலம் அறிவிப்பது தொடர்பாகவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: