நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை – கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி உறுதிபடத் தெரிவிப்பு!

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு எவருடைய பரிந்துரைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையில்லாத பிரச்சினைகளைத் தோற்றுவித்து, சில அரசியல் கட்சிகள் நாட்டை சீர்குழைக்க முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்திருந்தது. ஆனால், நாட்டை முன்னேற்றும் அதிஷ்டம் எமது அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
முதலாவதாக தேசிய கடன் மறுசீரமைப்புப் பணிகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்றில் நிதிக்குழு ஆலோசனைகளை நடத்தியது. கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் இதற்காக வேலை செய்தார்கள்.
ஆனால், துரதிஷ்ட வசமாக அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் இதற்கு கிடைக்கவில்லை. சில தரப்புக்கள் மற்றும் சிறிய கட்சிகள் இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி, இந்தச் செயற்பாட்டை குழப்பியடிக்க இவர்கள் முற்பட்டார்கள். எனினும், மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போது நீதிமன்றின் ஊடாக இதற்கு தடையுத்தரவைப் பெற்றுக் கொள்ள இவர்கள் முயல்கிறார்கள். தங்களின் அரசியல் லாபத்திற்காக நீதிமன்றங்களை பயன்படுத்த இவர்கள் நினைக்கிறார்கள்.
எனவே, தேவையில்லாதப் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று நாம் சிறு கட்சிகளுக்கு தெரிவிக்கிறேன்.
இப்படியான அரசியல் கலாசாரத்தினால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. இவ்வாறான அரசியல் கலாசாரத்தினால்தான் நாடு அழிவடைந்தது. இந்த கலாசாரத்தின் ஊடாக நாட்டை அழிவுக்கு உட்படுத்த நான் ஒருபோதும் அனுமதி அளிக்கவும் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|