நாடாளுமன்றத்தில் உரையாற்றினோம் என்ற செய்திக்காகவே பொறுப்புக்கூறக்கூடிய யாருமில்லாத சபையில் சம்பந்தன் உரையாற்றியிருக்கின்றார்! டக்ளஸ் தேவானந்தா

Friday, August 26th, 2016

தமிழ் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகளை அரசுடன் அர்த்தபூர்வமாக பேச்சுக்களை நடத்தி தீர்வுகாணாமல் ஊடகங்களுக்கு பரபரப்புக்காட்டுவதற்காகவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றினோம் என்ற செய்திக்காகவுமே பொறுப்புக் கூறக்கூடியவர்கள் யாருமில்லாத சபையில் சம்பந்தன் ஒத்திவைப்பு விவாதம் தொடர்பாக உரையாற்றியிருக்கின்றார் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஒத்திவைப்பு விவாதமொன்று கொண்டுவந்தமை தொடர்பாகவே குறித்த கருத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம் –

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்தியிருந்தார்.

இதில் பரிதாபம் என்னவென்றால் அரசாங்கத்தை தாமே ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகக் கூறிக்கொள்கின்றவரும், அரசாங்கமே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றவருமான சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டுவந்ததை அரசாங்கம் கண்டு கொள்ளவும் இல்லை. அதில் அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில்,

அரசாங்கத்தை தாமே ஆட்சிக்குக் கொண்டுவந்ததாகக் கூறிக்கொண்டு, அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அரசாங்கத்துடன் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதையும் இதுவரை நடத்தியதாகத் தெரியவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் சம்பந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற விடுதலையாகிய தமிழ் அரசியல் கைதிகளின் பிரதிநிதிகளையும், தற்போதும் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரதிநிதிகளையும் மதிக்காமல் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமலும் நாகரீகமற்றவகையில் நடந்துகொண்ட சம்பந்தனின் செயற்பாடு தொடர்பில் பல தரப்பும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கைதிகள் விவகாரம் மற்றும் காணால்போனோர் விவகாரம் என்று சபையில் ஒத்திவைப்பு விவாதம் செய்து சம்பந்தன் உரையாற்றியபோது பிரதமரோ, சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ சபையில் இருந்திருக்கவில்லை.

அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் பங்காளிகள் என்றவகையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தையும், காணாமல் போனோர் தொடர்பான விடயத்தையும் அரசுடன் கலந்துரையாடி சாதித்திருக்க வேண்டும். அதைவிடுத்து இவ்விடயங்களையும் நாடாளுமன்றத்தில் உரையாற்றினோம் என்ற செய்திக்காகவே பொறுப்புக்கூறக்கூடிய வகையில் யாருமில்லாத சபையில் சம்பந்தன் உரையாற்றியிருக்கின்றார். தமக்கான தனிநபர் பதவிகளுக்காகவும், அரசியல் சலுகைகளுக்காகவும் அரசோடு இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்திப் பெற்றுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,

தமிழ் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகளை அரசுடன் அர்த்தபூர்வமாக பேச்சு நடத்தி தீர்வுகாணாமல் ஊடகங்களுக்கு பரபரப்புக்காட்டுவதற்காக இவ்வாறு ஒப்புக்குச் சப்பாக செயற்படுகின்றார்கள். யுத்தத்தை நடத்திய அரசாங்கங்களுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்துவதும், அந்த அரசுகளிடமிருந்து அபிவிருத்தியையும், மீள் எழுச்சி வேலைத்திட்டங்களையும், மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதும் கட்டாந்தரையில் பால் கறப்பதற்கு ஒப்பான கடினமான காரியமாகவே இருந்தது. ஆனால் இப்போது யுத்தம் இல்லாத சூழலில், அரசுடன் இணக்க அரசியல் நடத்துவது பசுந்தரையில் நடப்பதுபோல் இலகுவான காரியமாகும்.

அரசுகளை நாம் எவ்வாறு நடைமுறைச்சாத்தியமாக அணுகுகின்றோம் என்பதிலேயே இணக்க அரசியலின் வெற்றி தங்கியிருக்கின்றது என்பது தான் எனது கடந்த கால அனுபவமாகும்.

Related posts: