நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 4th, 2024

1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம்  நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தால் அதனை நீக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாடாளுமன்றத்தினால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.. 

யாரேனும் இந்த சட்டங்களை மட்டுப்படுத்த விரும்பினால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு முன்பாக பரிசீலிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆனால், இந்த சட்டங்களை நிறுத்தி, மக்களை இனியும் துன்புறுத்துவதற்கு இடமளிக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.

இவற்றை மனித உரிமை மீறல்களாக காண்பிக்க சிலர் முயல்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாவது மனித உரிமை என்பது நாட்டு மக்களின் வாழ்வுரிமை என்றும், இரண்டாவது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க:

”2021-2022இல் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதற்குக் காரணம், நாம் நீண்ட காலமாக கடனில் வாழ்ந்து வருவது தான். கடனை முகாமைத்துவம் செய்ய முடியாமல், நாடென்ற ரீதியில் வீழ்ச்சியடைந்தோம்.

வருமானம் இல்லாததால் கடனைச் செலுத்த முடியவில்லை. இந்த அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு முன்பிருந்தே  கடன் வாங்கத் தொடங்கியிருந்தோம். ஏனைய நாடுகளைப் போல் அல்லாமல், வர்த்தகம் செய்ய முடியாத பொருட்களுக்கு கடன் வாங்கினோம்.

ஏனெனில் நெடுஞ்சாலைகளுக்கு  மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிர்மாணத் துறையால் நாம் பயனடைய முடியாது. மகாவலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது எங்களுக்கும் மின்சாரம் கிடைத்தது. அத்தோடு விவசாயத்துறையும் முன்னேறியது. 

நாடு எதிர்கொள்ள நேரிட்ட இந்த நிலைக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த நிலைமையில் இருந்து, முன்நோக்கிச் செல்ல வேண்டும். இன்று கடனை அடைக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே கடனைத் திருப்பிச் செலுத்த 2026-2027 வரை கால அவகாசம் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனுடன் இன்னும் பல விடயங்கள் உள்ளன.

2022 அரசாங்க வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% ஆகும். 2023ல் அதை 10.9% ஆக உயர்த்தினோம். அதனால் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி  அதிகரிக்கவில்லை. மறை 2% வீதத்தில் இருந்து இந்த ஆண்டு 13.1% ஆக  அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். 2028இற்குள், இது 15.2% ஆக உயரும். 8.3% இலிருந்து 15.2% ஆக அதிகரிப்பதென்பது சுமார் 175% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இதேவேளை முதன்முறையாக, 2023 இல் நமது முதன்மை பட்ஜெட் 6.7% உபரியைக் காண்பித்தது. நாம் அதை 2.3% ஆகக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் பட்ஜெட் பற்றாக்குறை 2022 இல் 10.2% ஆகும். 2028 இற்குள் அதை 3.9% ஆக மாற்ற வேண்டும். இவை எளிதான பணிகள் அல்ல. இவைதான் எங்களுக்கு இருக்கும் சவால். எங்கள் கடன் 2022 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128% ஆகும். 2032இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆக  குறைக்க வேண்டும். 2022 இற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% கடன் வாங்கினோம். அதை 13 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

இந்த நிலைமையுடன் நாம் எவ்வாறு தொடர்ந்து முன்நோக்கி செல்ல முடியும்?  நாட்டின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும்.  இறக்குமதி செய்ய நம்மிடம் அந்நியச் செலாவணி இல்லை. போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அதே நேரத்தில், டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

இந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதில், புதிய சட்டங்கள் அவசியம். ஐரோப்பிய வர்த்தக அமைப்பு  ஒல்லாந்து ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ரோமன்-ஒல்லாந்து முறைமை  இன்றும் நமது சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1835 இல் வெள்ளையர்கள் பொருளாதாரத்தை திறந்து விட்டார்கள். பின்னர் அவர்கள் சட்டம் கொண்டு வந்தனர். 1970 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சோசலிச கட்டுப்பாட்டு பொருளாதாரத்தை உருவாக்கியது. அதற்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

1977 ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். அதன்போதும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த புதிய பொருளாதார திட்டத்திற்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: