நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பு உதவி!

Thursday, January 12th, 2023

நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய அமைப்பு உதவும் என்று பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பின் (CPA) பொதுச் செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அண்மைய வன்முறைச் செயல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அவர், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு ஆதரவளிக்கும் என்று கூறினார்.

இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கான பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் பயிற்சித் திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்துமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் குறுகிய காலத்திற்கு கிராமப்புறங்களுக்குச் சென்று கிராமிய பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்க உதவுவதற்காக இங்கிலாந்தில் வதிவிடப் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆதரவளிக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

91 வருடங்களுக்கு முன்னர் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் வெஸ்ட்மினிஸ்டர் முறைமையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவது குறித்து பொதுநலவாய நாடதளுமன்ற அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு விளக்கிய பிரதமர், இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கையில் காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து அவர் தூதுக்குழுவிற்கு விளக்கியதுடன், பொதுநலவாய அமைப்பின் உத்தியோகபூர்வ சாசனத்தின் கீழ் முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆராய்வதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்த வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.

பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்திய அலுவலகம் விரைவில் இலங்கையில் திறக்கப்படும் எனவும் டுவிக்ஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகளின் தேசிய நாடாளுமன்றங்களும், பாகிஸ்தானில் உள்ள துணை-தேசிய சட்டவாக்கமன்றமும் உட்பட, ஆசியப் பகுதி எட்டு சட்டவாக்க மன்றங்களைக் கொண்டுள்ளது. பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்தியம் பல திட்டங்களை பிராந்தியங்களுக்கு இடையே நடத்துகிறது.

பொதுநலவாய மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு பிராந்தியம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்திய செயலகமொன்று தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: